Wednesday, June 26, 2013

தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ?





1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும்.

2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை. வாழும் மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் ஒட்டித்திரியாமல் நன்றாக விலகிக் கட்புலம் எட்டக்கூடிய தொலைவில் நடமாடக் கூடியவர்கள். அவர்களை அழைப்பதற்கு, ஓங்கி குரலெடுத்துக் கூப்பிடுவதற்குத் தமிழும் அதன் இனமான திராவிட மொழிகளும் ஏற்றவை. குடியிருப்புப் பகுதியிலிருந்து காட்டுக்குள் வேலை செய்கின்றவர்களை எட்டும் அளவுக்கு ஓங்காரமாய்க் கூவி அழைத்துச் செய்தி தெரிவிக்கும் காட்சியை இன்றும் ஊர்ப்புறங்களில் காணலாம்.

3. தமிழில் பேசுவதற்கு சுவாசமண்டலம் ஏராளமான காற்றை உள்ளிழுத்து வெளியேற்ற வேண்டியிருக்கும். தமிழ் போன்ற ஒரு மொழியைப் பேசுவதே நெஞ்சுரத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் இதமான பயிற்சியாகும். உதாரணத்திற்கு பாரதியார் பாடல்கள் சிலவற்றை வாய்விட்டு உச்சரித்துப் பாருங்கள். இரண்டு சுற்று மைதானத்தில் ஓடியதுபோல் மூச்சு வாங்கும்.

4. தமிழ் முதன்மையாக இசைத்தன்மை வாய்ந்த மொழியாகும். தமிழில் நல்ல பொருள்வளத்துடன் வழங்கும் எந்தவொரு சொற்றொடரும் தன்னளவில் இனிய இசைப்பாங்குடன் அமையப் பெற்றிருப்பதைக் கவனிக்கலாம். அந்தத் தன்மையால்தான் திராவிட மொழிகளில் எண்ணற்ற பழமொழிகள் தோன்றின. பேச்சுப் புலமை மட்டுமே தகுதியாய்க்கொண்டிருந்த பாமர மக்கள், வாழ்வியல் உண்மைகளை அவர்கள் பேசும் தொடர்களில் ஏற்றிவைத்தனர். இந்த இசைத்தன்மை மொழியின் இயற்கையான பண்பாக இருப்பது தனித்த சிறப்பு.

5. தமிழ் அளவில்லாத சொல்வளம் பெற்றிருக்கும் மொழியாகும். தமிழில் வழங்கும் பெயர்ச்சொற்கள் ஒன்றிரண்டோடு சுட்டி முடிந்துவிடுவதில்லை. ஒன்றைக் குறிக்க மிகச் சாதாரணமாகப் பத்திருபது பெயர்ச்சொற்கள் இருக்கின்றன. அதேபோல் ஒற்றைச் சொல்லுக்கு எண்ணற்ற பொருள்களும் வழங்குகின்றன. எடுத்துக்காட்டாக, பாணி என்ற வெறும் இரண்டெழுத்துச் சொல்லுக்கு – காலம், தாமதம், நீண்ட காலம், இசைப்பாட்டு, இசை, ஒலி, இசையுறுப்பாகிய தாளம், அழகு, அன்பு, முல்லை யாழ்த் திறத்துள் ஒன்று, பறைப்பொது, கூத்து, கை, பக்கம், சொல், சர்க்கரைக் குழம்பு, கள், பழச்சாறு, இலைச்சாறு, மிளகும் பனைவெல்லமும் சேர்ந்த ஒரு மருந்துவகை, நீர், ஊர், நாடு, ஊர்சூழ் சோலை, காடு, பூம்பந்தர், பலபண்டம், கடைத்தெரு, நடை, சரகாண்டபாடாணம், பாடினி – என்று எத்தனை பொருள்கள் வழங்குகின்றன, பாருங்கள் !

6. ஒரு மொழியின் உயிர்நாடி அதில் வழங்கும் வினைச்சொற்கள்தாம். அம்மொழி பேசும் மக்கள் எத்தகைய வினைத்திட்பம் மிக்கவர்கள் என்பதையும் அச்சொற்களே எடுத்தியம்புகின்றன. தமிழ் வினைச்சொற்களின் அருமை என்னவென்றால் அவற்றுள் ஏராளமானவை பெயர்ச்சொற்களைப் போலவே வடிவில் எளியதாயும் அளவில் சின்னஞ்சிறிதாயும் இருப்பவை. உதாரணத்திற்குப் ‘பொங்கு’ என்ற இந்தச் சிறிய வினைச்சொல் பத்துக்கும் மேற்பட்ட செயல்களைச் சுட்டுவதாகும். அவை (பொங்குதல்) : காய்ந்து கொதித்தல், கொந்தளித்தல், மிகுதல், பருத்தல், மேற்கிளர்தல், மகிழ்தல், சினத்தல், செருக்குறுதல், நுரைத்தல், விளங்குதல், மயிர் சிலிர்த்தல், வீங்குதல், விரைதல், துள்ளுதல், கண் சூடடைதல், உயர்தல், செழித்தல், ஒலித்தல், சமைத்தல்.

7. ஒருவரின் சிந்தனைப் பாங்கு அவர் பேசுகின்ற மொழியோடு தொடர்புடையது. எண்ணம் வெறும் படிமத்தளத்தில் தோன்றுவது. அந்தப் படிமத்தை விளக்குவதற்கு, குறைந்தபட்சம் எண்ணியவரே விளங்கிக்கொள்வதற்கு அவருக்குத் தெரிந்த மொழியே துணை. எண்ணியவற்றை விளக்க, போதாக்குறையோடு ஒருவரின் மொழி இருந்தால் அந்த எண்ணத்தால் ஆகக்கூடிய நன்மை என்ன ? வளமான தாய்மொழியை வாய்க்கப் பெற்றவர் தம் எண்ணங்களை படிமத் தளத்திலிருந்து இல்லை, மொழித்தளத்திலிருந்தே உருவாக்கிக் கொள்ள வல்லவர் ஆவார்.

8. வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மெய்யெழுத்துகளும் உயிர்மெய்யெழுத்துகளும் தமிழின் உச்சபட்சச் சிறப்பாகும். ‘தமிழ்’ என்ற பெயரே இந்த மூன்று வகை எழுத்துகளையும் பயன்படுத்தி வழங்கும் பெயர் என்பர். த – வல்லின உயிர்மெய். மி – மெல்லின உயிர்மெய். ழ் – இடையின மெய். வன்மையாகக் கூறவேண்டிய இடத்தில் வல்லின மெய்களையும் வல்லின உயிர்மெய் எழுத்துகளையும் மிகுதியாகப் பயன்படுத்தி முழங்கினால், அந்த முழக்கம் முழங்குபவரின் உடலையும் மனத்தையும் பறைபோல் அதிரச் செய்துவிடக்கூடியது. ’எரிமலை எப்படிப் பொறுக்கும் ? நம் நெருப்புக்கு இன்னுமா உறக்கம் ? சிங்கக் கூட்டம் நிமிர்ந்தால் துன்பச் சிறையின் கதவு தெறிக்கும் !’ – இவ்வரிகளில் வல்லின மெய் மற்றும் வல்லின உயிர்மெய்கள் மிகுந்து புழங்குவதால் உச்சரிப்பும் ஒலிப்பும் வன்மை உணர்ச்சி ததும்ப இருக்கின்றன.

9. மெல்லின மற்றும் இடையின மெய்களைப் பயன்படுத்தி எழுதினால் தமிழ்மொழி மென்மையின் தடத்தில் அதிராமல் நடக்கும். அவ்வகையான சொற்களை உரிய மாத்திரை அளவுகளில் திருத்தமாக உச்சரித்தால் மயக்கமே வந்துவிடும். உதாரணத்திற்கு ‘மெல்ல நட… மெல்ல நட… மேனி என்னாகும் ? சின்ன மலர்ப்பாதம் நோகும் ! உந்தன் சின்ன இடை வளைந்துவிடும் ! வண்ண சிங்காரம் குலைந்துவிடும்.’ மெல்லின மெய்களின் மென்மை புரிகிறதா ? (உங்க ளுக்கு எளிதில் விளங்கவேண்டும் என்பதற்காகவே திரைப்பாடல் உதாரணங்களைக் கூறியுள்ளேன். பாடல்கள் உச்சரிப்பொலிகளையும் கூடுதலாக நினைவூட்டும் என்பதற்காகவும்)

10. உலகில் எத்தனை இனங்களுக்குச் சொந்தமான தாய்மொழி வாய்த்திருக்கிறது என்று சிந்தியுங்கள். புலம்பெயர்ந்து ஏதிலிகளாக வாழ நேர்ந்தவருக்கும் உடன் வரும் சொத்து அவர்களின் தாய்மொழி. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எத்தனை மொழிகள் பேசும் உதடுகளற்றுச் செத்தன என்று எண்ணுங்கள். இயேசுநாதர் பேசிய ஹீப்ரு மொழி பேசுவாரற்று ஆராய்ச்சிக் கூடத்தில் இன்று அடங்கிவிட்டது. வெறும் ஆயிரங்களில் சொற்களையுடைய மொழிகளைக்கூட அந்தந்த இனத்தினர் விடாது பற்றிக்கொண்டுள்ளனர். நம் பிள்ளைகள் எந்த மொழியை வேண்டுமானாலும் பயிலட்டும். ஆனால், தமிழைப் பழுதறக் கற்றுவிடட்டும்.

Saturday, June 22, 2013

தலைக்கோட்டைப்போர் - விஜயநகரப் பேரரசின் முடிவு


தென்னிந்தியாவின் பேரரசாக இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் செங்கோல் செலுத்தியிருந்த விஜயநகர அரசுக்குத் தலைக்கோட்டைப் போர் முடிவுரையாக அமைந்தது. 

கிருஷ்ண தேவராயருக்குப் பிறகு, ஏதாவது ஒரு வகையில் அரசவம்சத்தில் உதித்தவர்களிடையே பதவிப் பேராசை பிடித்தாட்டியது. ஒருவரை ஒருவர் ஏய்த்தோ கொன்றே அரசராகினர். அல்லது வாரிசுரிமைப்படி ஒருவரை அரச கட்டிலில் அமர்த்திவிட்டு, மதியூகியாக இருந்த அமைச்சர் எல்லா அதிகாரங்களையும் கைக்கொண்டு ஆண்டு வந்தார். 

சதாசிவராயர் என்பவரை மன்னராக ஆக்கிவிட்டு அவருடைய பிரதம அமைச்சர் இராமராயர் என்பவர் நிழல் அரசராக வலம் வந்தார். விஜய நகர அரசைப் பொறுத்தவரையில் கிருஷ்ணா நதிக்கும் துங்கபத்திரை நதிக்கும் இடைப்பட்ட பகுதிக்காக (இடைநாடு என்கிறார்கள்) வடக்கேயிருந்த பீஜப்பூர், அகமதுநகர், கோல்கொண்டா, பீரார், பீடார் பகுதிச் சுல்தான்களோடு நிரந்தரமான சர்ச்சையும் சமரும் ஏற்பட்டவண்ணம் இருந்தன. அந்த விவாகாரங்களில் எப்போதும் விஜயநகர அரசர் கைகளே ஓங்கியிருந்தன. மேலும் இந்த சுல்தான்களுக்கிடையேயும் தீராத முன்வினைப் பகைகள் இருந்தன. 


காலப்போக்கில் இந்த சுல்தான்களுக்கிடையே மணவினை உறவுகள் ஏற்பட அவர்களுடைய பகை பின்தங்கியது. நட்புக்கரம் நீட்டும் நோக்கத்தோடு பீஜப்பூர் சுல்தான் அடில்ஷா இராமராயரின் மகன் இறந்த துக்கம் விசாரிக்க அரண்மனைக்கும் வந்திருக்கிறார். கிளம்பிச் செல்லும்போது தம்மை வழியனுப்ப இராமராயர் வராததைப் பெரிய அவமதிப்பாகக் கருதிவிட்டார் சுல்தான். நட்புக்கரம் முறிந்தது. 

இந்த சுல்தான்களுக்கிடையே மத்தியஸ்தராகவும் இருந்த இராமராயர் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவரிடம் அரசியல் சாணக்கியத்துடன் பிரித்தாளும் சூழ்ச்சியை உபயோகித்திருக்கிறார். இந்த வேலைகள் யாவும் சுல்தான்களிடையே ஏற்பட்ட மண உறவுகளால் அம்பலமாகி, பகை பழுக்கக் காரணமாகிவிட்டது. 

இராமராயர், நிழல் அரசராக வலம்வந்த அமைச்சர்தான் என்றாலும் அவருடைய நிர்வாகத்தில் பேரரசு செல்வச் செழிப்பின் உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டை ஐந்து மண்டலங்களாகப் பிரித்து ஒவ்வொரு மண்டலத்திற்குமான ஆளுநரை மகாமண்டலீஸ்வரர் என்ற பெயரில் நியமித்து (அவர்கள் பெரும்பாலும் அரசர்/அமைச்சர் குடும்பத்தோடு தொடர்புடையவர்கள்) ஆண்டிருக்கிறார்கள். 


ஒவ்வொரு மண்டலீஸ்வரரும் அந்தந்த பகுதியில் சுமார் ஐம்பதாயிரம் வரையிலான எண்ணிக்கையுடைய காலாட்படையை வைத்திருந்திருக்கின்றனர். போர்க்குதிரைகள் ஆயிரங்களிலும் யானைகள் நூறுகளிலும் படையில் இடம்பெற்றன. 

விஜயநகர அரசர்கள் காலத்தில் மேற்குக் கடற்கரையில் கோவா போன்ற பகுதியில் வணிகத்திற்காகக் காலூன்றிய போர்ச்சுகீசியர்களின் முக்கிய வணிகமே கப்பல் கப்பலாக குதிரைகளை இறக்குமதி செய்து விஜயநகர அரசர்களுக்கு விநியோகம் செய்வதுதான். இதுதொடர்பாக போர்ச்சுகீசியர்களுடன் கிருஷ்ண தேவராயர் ‘எப்ப ஆயிரம் குதிரைகள் வந்திறங்கினாலும் நேராக எங்கள் கொட்டடிக்கு ஓட்டி வந்துவிடவும்’ என்று ஒப்பந்தமே போட்டிருக்கிறார். 

குதிரைகளைப் பழக்க இஸ்லாமிய வீரர்களும் பயிற்சியாளர்களும் விஜயநகரப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கோட்டைக்குள்ளேயே தொழுகைக்குப் பள்ளி வாசல் கட்டிக்கொள்ளவும் அனுமதி தந்திருக்கின்றனர்.


இராமராயரிடம் பீஜப்பூர் சுல்தான் ஒரு தூதுக்குழுவை அனுப்பி ரெய்ச்சூர் கோட்டையைத் தம் வசம் ஒப்படைக்கக் கேட்டிருக்கிறார். இராமராயர் வழக்கம்போல் தூதுக்குழுவை மாதக்கணக்கில் சந்திக்காமல் இழுத்தடித்து அவமானப்படுத்தி அனுப்பியிருக்கிறார். இதனால் தக்காண சுல்தான்கள் விஜயநகரப் பேரரசுக்கு எதிராய்ப் போரிட, கூட்டுப்படை அமைத்தனர். 

1565ஆம் ஆண்டு கிருஷ்ணை நதிக்கரைக்கு வடக்கே தலைக்கோட்டை என்னுமிடத்தில் அவர்கள் முகாமிட்டனர். தமக்கெதிராக சுல்தான்கள் படைதிரட்டி நிற்பதை அறிந்த இராமராயர் பேரரசின் மண்டலீஸ்வரர்கள், தம் ஆதரவு பெற்ற சிற்றரசர்கள் ஆகிய அனைவரும் தங்களின் முழுப்படையுடன் வந்து சேரும்படி தகவல் அனுப்பினார். பல்வேறு இடங்களில் இருந்தும் படைப்பிரிவுகள் வந்து சேர்ந்தன. 

சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சதாசிவராயர் விஜயநகரத்திலேயே வீற்றிருக்க, இராமராயர் தம் தம்பிகள் திருமலைராயர், வேங்கடாத்திரி ஆகியோருடன் படைத்தலைமை ஏற்றுத் தலைக்கோட்டைக்குச் சென்றார். இந்திய சரித்திரத்தில் தென்னிந்திய நிலத்தில் நிகழ்ந்த முதலும் கடைசியுமான பெரும்போர் தலைக்கோட்டைப் போர்தான். 


விஜயநகர அரச படைகளில் ஒன்பது இலட்சம் காலாட்படையினரும், நாற்பத்தைந்தாயிரம் குதிரைப்படையினரும் இரண்டாயிரம் போர்யானைகளும் இடம்பெற்றிருந்ததாக பெரிஷ்டா என்னும் வரலாற்றாசிரியர் எழுத , கூட்டோ என்பவரோ காலாட்படையினர் ஆறு இலட்சம், ஒன்று அல்லது இரண்டு லட்சங்களில் குதிரைப்படையினர் மற்றும் நூறுகளில் யானைகள் என்று எழுதுகிறார். எதிர்த்து நிற்கும் சுல்தான்களில் கூட்டுப்படைகள் இவற்றில் பாதியளவே இருந்திருக்கிறது. ஆனால், அவர்களிடம் அதிக எண்ணிக்கையில் பீரங்கிகள் இருந்திருக்க வேண்டும். 

1565ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் போர் தொடங்கியது. நம்மை ஆண்ட முடியாட்சி முறையின் கடைசி திராவிடப் பேரரசு தன் அந்திமத்தில் அடியெடுத்து வைத்த நாள். இருதரப்புக்கும் இடையே உக்கிரமான போர் நடந்தது. 



முதலில் விஜயநகரப் படைகள் எதிர்த்தரப்பைத் திணறடித்தன. அவர்களிடமிருந்து வெடித்த பீரங்கிகள் இராமராயர் தலைமையிலான படைக்குப் பெருத்த சேதத்தை விளைவித்தன. இராமராயர் தாமே முன்னின்று, தீரமாகப் போரிட்ட வீரர்களுக்குப் பொன்னும் பொருளும் வழங்கி ஊக்கிக்கொண்டிருந்தார். 

ஒருகட்டத்தில் விஜயநகரப் படைகள் வெற்றி முகத்தில் நின்றுகொண்டிருக்க, அது நிகழ்ந்தது. வரலாற்றின் மகத்தானவை எல்லாவற்றையும் முடிவுக்குக் கொண்டுவந்த துரோகம்தான் அது. விஜயநகரப் படைப்பிரிவில் முக்கியமான இரண்டு பிரிவுகளைத் தலைமையேற்றிருந்த முஸ்லீம் தளபதிகள் விஜயநகரப் படையை விட்டு விலகி, சுல்தான் படைகளிடம் போய்ச்சேர்ந்தனர். 

இதற்கிடையே மதம்பிடித்த யானையொன்று (போர் யானையின் தந்தங்களில் கூர்வாள்கள் கட்டியிருப்பர் என்பது குறிப்பு) உன்மத்தம் முற்றி இராமராயரின் பல்லக்கை நோக்கிக் கண்மண் தெரியாமல் ஓடிவந்தது. யானையைக் கண்டு பயந்துபோன பல்லக்குத் தூக்கிகள் பல்லக்கைத் தரையில் எறிந்துவிட்டு அலறியடித்து ஓடிவிட்டனர். 


பல்லக்கில் இருந்து இராமராயர் விழுந்துவிட, அவரை எதிரிப்படையினர் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். அந்த இடத்திலேயே இராமராயரின் தலையைக் கொய்து ஈட்டியில் செருகி விஜயநகரப் படைவீரர்கள் இடையே தூக்கிப் பிடித்தபடி வலம் வந்தார்கள். 

தலைமைக்கு நேர்ந்த முடிவால் விரக்தியும் பீதியும் உற்ற விஜயநகரப் படையினர் சிதறி ஓடினார்கள். இராமராயரின் இளவல் திருமலைராயருக்குக் கண்ணில் அம்பு குத்தியது. மற்றொரு இளவல் வேங்கடாத்திரி என்னவானார் என்றே தெரியவில்லை. போரில் கிடைத்த பொன் பொருள்களையும் குதிரை, யானை உள்ளிட்ட செல்வங்களையும் சுல்தான்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டனர். 


விஜயநகரத்தில் இருந்த அரசர் சதாசிவராயருக்குத் தம் படையும் படைப்பிரதானிகளும் அழிந்துவிட்டது தெரியவர, தம் சாம்ராஜ்ஜியம் முடிவுக்கு வந்ததை உணர்ந்தார். விஜயநகரத்தின் கருவூலத்தையும் பொன் பொருள் நவரத்தினங்களையும் ஐந்நூறு யானைகளில் ஏற்றி அருகிலுள்ள பெனுகொண்டாவுக்கு அனுப்பிவிட்டு, தாமும் தம் தலைநகரைக் கைவிட்டு வெளியேறினார். 

செய்வதறியாத விஜயநகர மக்கள் இருப்பதை அள்ளிப் போட்டுக்கொண்டு தென் பகுதியை நோக்கிப் பதறி ஓடினர். பலர் தம் செல்வங்களைப் புதைத்து வைத்தனர். பலர் கொல்லப்பட்டனர். அதுவரை சுற்றிலுமிருந்த காடுகளில் திரிந்த கொள்ளையர் கூட்டமும் தம் பங்குக்கு விஜயநகரத்துள் நுழைந்து பெருங்கொள்ளை அடித்தது. 


விஜயநகரத்தில் நுழைந்த எதிரிப் படைகள் சுமார் ஆறு மாதங்கள் தங்கியிருந்து நகரை அங்குலம் அங்குலமாகத் தீயிட்டுப் பொசுக்கினர். கலைக்கட்டுமானங்கள், கோட்டை கொத்தளங்கள் எல்லாவற்றையும் தரைமட்டமாக்கிவிட்டுத்தான் வெளியேறினர். 

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் அகலொளிர் மாடங்களும் அன்பெழில் மங்கையரும் கலைதிகழ் கட்டிடங்களும் என விண்ணகம் பழிக்க வாழ்ந்த பெருநகரம் இப்போது பாம்புகளும் நரிகளும் ஒட்டடைகளும் வௌவால்களும் நிறைந்த பாழ்நகராயிற்று. பிறகு சுல்தான்களும் தங்களுக்குள்ளாக ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு வீழ்ச்சியடையவேண்டிய நிலைமை ஏற்பட்டது வேறு விஷயம்.


பெனுகொண்டாவிற்குச் சென்ற சதாசிவராயர் சில ஆண்டுகள் கழித்து வந்து விஜயநகரத்தைப் புனர்நிர்மாணம் செய்து பார்த்தார். ஆனால், மக்கள் ஒருவரும் அந்நகருக்குக் குடிவர மறுத்துவிட்டார்கள். பெனுகொண்டாவிலும் தலைவலிகள் இருந்ததால் சந்திரகிரிக்கும் வேலூருக்கும் (வேலூர் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் விஜயநகர அரசர்கள் உபயமே) தம் தலைநகரை விஜயநகர அரசர்கள் மாற்றி மாற்றித் தெற்கே வந்தவண்ணம் இருந்தனர். 


சதாசிவராயரும் 1570இல் திருமலை ராயரால் கொல்லப்பட்டார். திருமலைராயர் 1575இல் இறந்துவிட அவருடைய மூன்று புதல்வர்களில் ஒருவரான வேங்கடர் 1614 வரை ஆட்சி செய்து பின் இறந்தார். அதற்குப் பின் தொப்பூர் பகுதியில் நிகழ்ந்த ஒரு போருடன் விஜயநகரப் பேரரசு முற்றிலுமாக வரலாற்றிலிருந்து மறைந்தது. 

பின்குறிப்பு : இந்தப் படையெடுப்புகள், நகர அமைப்புகள், மக்கள் வாழ்க்கை, அரண்மனை, அரச சிந்தனை, போர்க்காட்சிகள், அழித்தொழிப்புகள், தீவைப்புகள் ஆகியவற்றைக் காட்சிரூபமாகக் காணவிரும்பினால் TROY என்கிற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள். அதில் வரும் காட்சிகள் யாவும் விஜயநகர வரலாற்றுச் சம்பவங்களுக்கு நிகரானவை, பிரம்மாண்டமானவை. ட்ராய் என்ற அந்தப் படம் ஹோமரின் இலியட் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. 



(படங்கள் கோட்டை இடுபாடுகளின் மீதம், விஜயநகரத்தின் தலைமைச் செயலகம், அந்தப்புரம்)